Tuesday, March 22, 2011

மறந்து... மன்னித்து விடு...

உன்னோடு இருந்தால் எல்லாமே எனக்கு சுகமே....
புரியாமல் போவதற்கு நான் ஒன்றும் மரம் அல்ல.

எனக்கும் தெரியும்,
என் கையினில் உள்ளது பெறுவதற்கரிய பொக்கிஷம் என்று....
ஆயினும் எடுத்துக்கொள்ள துணிவில்லை...
காதல் என்ற ஒன்றால் உன் மொத்த சிரிப்பையும் -
கபளீகரம் செய்ய சத்தியமாக எனக்கு விருப்பமில்லை....

நான் செய்த - மறக்கவே முடியாத, மன்னிப்பே இல்லாத பாவங்களுக்கு....
ஏழு ஜென்மங்களிலும் எனக்கு விடிவே இல்லை...
பாவப்பட்டவனின் பாதி நிழல் கூட உன் மேல் விழ வேண்டாம்.

நீ தான் வேண்டும் என்று உன்னிடம் - உளமாற உரைக்கத்
தெரிந்த எனக்கு.... உன்னோடு வாழ விருப்பம் இல்லாமலா போய்விடும்....
நீயே என் உலகமாய் இருக்க வேண்டும் என்று தானே -
எல்லாவற்றையும் தொலைத்தேன், எல்லாரையும் வேண்டாம் என்றேன்....

காலங்கள் கூடுமா என்று கவலையோடு தவித்திருந்த நேரங்களில்...
நீ என்னோடு இருப்பதாய்த் தானே, என்னை மீண்டும் உயிர்ப்பித்தெழுந்தேன்
இன்றோ- எல்லாம் என் கைவசம்....
மனம் தான் இல்லை என்னிடம்.... உன்னை கூட்டிச்செல்ல -
காரணம் நீ இல்லை - என் உயிரே.

என் பிறவிப் பிழை - உன்னைக் கரம் பிடிக்கக் கூடாதென்று,
யாரிடம் புலம்பி அழுவதென்று தெரியவில்லை...
அழுவதற்குக் கூட தகுதி என்னிடம் உண்டா என்றே புரியவில்லை....

எதிரில் நீ நின்றால் ,
என் எதிர்காலம் அத்துணைப் பிரகாசமாய் ஒளிர்கிறது....
தகுதி மட்டும் தான் இல்லை என்னிடம்...

நான் மட்டுமே போதும் என்கிறாய், எனக்கு மட்டுமே தெரியும்....
என்னால் எப்போதுமே...
என்னை முழுதாய் உனக்கு கொடுக்க முடியாமல் போய்விட்டேனே என்று ...
இதை உன்னிடம் சொல்லவும் முடியாமல்...
உன்னை வெறுக்கவும் முடியாமல் , பிரியவும் முடியாமல்...
இறுதியில் நடிக்க மட்டுமே செய்தேன்...செய்கிறேன்...
உன்னை வேண்டாமென்று....

புரிந்து கொள்ளடி...
என் உயிரே...
நான் உனக்கு என்றுமே ஏற்றவன் அல்ல...
எப்போதுமே...!!!!

என்ன விட்டு விலகிச் சென்றுவிடு..... நீ வாழ வேண்டியவள்...
நான் வாழ்வைத் தொலைத்தவன்....!!!!!

இவ்விரண்டும் எதிர்மறையானவை, என்றுமே இணைய வாய்ப்பில்லை,
மறந்து... மன்னித்து வீடு...

Friday, February 25, 2011

உன்னிடம்...............

உன்னிடம் சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் எல்லாம்...
இதோ இந்த உயிரற்ற வலைப்பதிவில்......

வேற்றுமை பெரிதாக ஒன்றும் இல்லை.....

நான் பேசி முடித்த பிறகு,
நீ - நின்ற இடத்தை விட்டு விலகிச் செல்வாய்...
இதுவோ....நின்றே இருக்கும்...

எதுவான போதும்..
என்னிடம் எதுவும் நீ உரைக்கப் போவதில்லை....உணர்த்தப் போவதுமில்லை....

சொல்லாமல் இருக்க மட்டுமே....
இனி நான் உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும்....

உன்னிடம் சொல்லி , வாய் விட்டு அழுவதை விட...
சொல்லாமல்... உள்ளுக்குள் அழுவது...
பார்ப்பவர்களுக்காவது பைத்தியக்காரத்தனமாகத் தெரியாமல் இருக்கும்....

உள் நெஞ்சின் வலி எப்போதுமே... ஒன்று தான்...
வெளியே அழுதால் மட்டும்... குறையுமா என்ன???

அருகினில் நீ இருந்தால் கூட...
இப்போதெல்லாம் வேண்டாம் என்கிறது இதயம்....
போதும் வலித்தது....

அழுது புலம்பிய காலங்களில் - என்றுமே...
நீ என்னோடு இருந்தது இல்லை....
சிரிக்கும் நேரத்தில் மட்டும் நீ அருகினில் வந்து....
சாதிக்கப்போவது ஒன்றுமில்லை....

நீ இல்லாமல்.. வாழ நான் கற்றுக்கொண்டுவிட்டேன்....
தனியே சிரிப்பதற்கும் நான் வழி கண்டுவிட்டேன்...

Thursday, December 9, 2010

மீண்டும் ஒரு முறை

நீ வேண்டுமென்று வரம் கேட்டேன்...
கிடைத்த ஆனந்தத்தில்.... மறந்தே போனேன்.....

மற்றும் ஒன்றை.....
நீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்று..... கேட்பதற்கு....

ஆகையினாலோ என்னவோ....

வந்த பொழுதிலேயே.....
உன் வசமாக்கிக்கொண்டாய்.... என்னை....

விழி முன் எப்போதும் நின்று....
என்னை (யே) வசந்தமாக்கினாய்....

தேடாத பொழுதும் முன் வந்து...
தேவைக்கு அதிகமாகவே என்னை சிரிக்க வைத்தாய்....

தோள் சாய நீ இருந்ததால்,
நீ மட்டுமே போதுமென்று இருந்துவிட்டேன்.....

ஆதலால்,

இன்று நான் மட்டுமே அழுகிறேன்,
கண்ணீரை துடைக்க..... என் கரங்கழுமின்றி.....

காற்றாய் நீ வந்தாய் .....
உன் ஸ்பரிசத்தை சுவாசிப்பதற்குள்....
கனவாகவே மறைந்து விட்டாய்...

இன்னும் தேடுகிறேன்.... நான் தொலைந்(த்)த....
உன்னை...!!!!

இனி இந்த உயிரில் ஏதும் இல்லை....
வருவேன் ஒரு முறையேனும்....

மீண்டும் ஒரு பிறவி எடுத்து...
உன்னோடு மட்டுமே இருக்க வேண்டுமென்ற வரத்தோடு....!!!!

Thursday, December 2, 2010

தேடல்.....

கால்கள் சென்ற பாதையில் செல்ல ஆசை தான்....
துணை இன்றி.. துளி அளவும் நகர மறுகின்றன - ---
உன்னைப்பற்றிய என் நினைவுகள்...

விட்டுச் செல்ல ஆயிரம் காரணங்கள் கண் முன்னே - எனக்கு எதிராக...
உன்னோடு இருக்க வேண்டும் - என்ற ஒரே காரணம் மட்டுமே என்னிடம்...!!!

வெல்வது காரணமா, இல்லை நானா.....??
எனக்கும் தெரியவில்லை.....

உன்னிடமும் இதை எல்லாம் சொல்ல நினைத்தாலும்....
நேரமோ, நெஞ்சமோ இல்லை உன்னிடம்...

நிலைத்து நிற்பதுவோ....
இறுதியாக நானும்.... என் கலையும் கனவுகள் மட்டுமே.....

புரிந்து கொள்ள நீ வர வேண்டுமென்று ஆயிரம் ஆசைகள்
அடி மனத்தில் இருந்தாலும்.....
உன்னிடம் சொல்ல...
வார்த்தைகள் மட்டும்... இல்லாமல் போய்விட்டது...

காரணம் நானா, நீயா???
காலம் மட்டுமே தெரிந்த விடையை....
நீ எவ்வாறு நிறைவேற்றுவாய்???

கற்பனையான கனவுகள் மட்டுமே ... துணை கொண்டு
நடத்துகிறேன் என்..... வாழ்வை....!!!!

வேண்டாம் என்றாலும்... வேறு வழியே இல்லாமல்.....
.நீ இல்லாமல் வாழ ............
கற்றுக் கொண்டிருக்கிறேன்....

என்னையே மறந்து நிற்கின்றேன்......
தொலைந்தே போகிறேன்.......

தேடி... என்றாவது ஒரு நாள்....
என்னிடம் வருவாயா?????

உணர்ந்தேன் ...

பேருந்தின் ஒரு ஓரத்தில் - இணக்கமாக,
தோள் மேல் சாய்ந்திருந்த தம்பதியின்
நெருக்கத்தை பார்த்த பின் தான்... உணர்ந்தேன் --

என் விரல்கள் உன்னுடையதோடு இறுக்கமாக பின்னாமல்
நடுவில் உள்ள வெற்றிடத்தை......
நீ இல்லாத நிஜத்தை.....!!!

Tuesday, December 15, 2009

மன்னித்துவிடு...!!!!!

உன்னால் கவிதை எழுத ஆரம்பித்தேன் -
உனக்காக .. உன்னை மட்டுமே - உணர்வால்
உருவகப் படுத்த நினைத்தேன் .....
பிறகே உணர்ந்தேன்,

உயிரற்ற வார்த்தைகள் - உண்மையை உணர்த்தாது...
என் உயிரே - உன்னிடம்
சொல்லித் தெரிய என் காதல்
உலகத்தோடு உய்யப் போவதில்லை....

ஏழு ஜென்மமும் எனக்கு எண்ணத்தில் -
விளங்கப் போவதில்லை - எப்படி, எவ்வாறு
உன்னிடம் இயம்புவதென்று...

எப்படியேனும், ஏதேனும் உன்னிடத்தில்
உணர்த்தியே ஆக வேண்டும் -- என்னசெய்ய
பாவியானேன் நான் -
மானிடனாகி விட்டேன்... மறித்துப் போகும்
மனித பேச்சே மீதமுள்ளது --

ஆதலால்,
மனத்தோடு மட்டுமே மறைத்து விட்டேன் - மண்ணோடு மடியட்டுமென்று
மன்னித்துவிடு...!!!!!

Monday, December 14, 2009

நீ வேறென்று எண்ணவில்லை...

எதிர்ப்புறமாக நீ இருந்தும் -
ஏக்கங்கள் அனைத்தும் எப்போதும் போல
என்னுள்ளேயே....

ஏனோ தெரியவில்லை - எனக்கென்றபோது
எழ மறுகின்றன வார்த்தைகள் எல்லாம்....

தோணும் எண்ணம் எல்லாம் - உன்னைப் பற்றியே
இருந்தாலும் , தொட மறுகின்றன என் விரல்கள்....

பழகிய நாட்கள் ஆயிரம் ஆன போதிலும்
பக்கத்தில் நீ அமர்ந்தால் - பரவசம் மட்டுமே என்னிடம்....

கால் கடுக்க உனக்காக நின்றாலும்
கண நேரம் கூட கோபம் எழுந்ததிலை
காணாமல் இருந்த உன்னை நினைத்து....

மாறாக நினைத்தால், நானே மறைந்து போகிறேன்
உன் நினைவுகளில்....

கிடைத்த கை குலுக்கல்கள் எல்லாம் -
எழும்பும் அலைகளைப் போல, உன்
ஸ்பரிசத்தையே துணை நிறுத்துகின்றது....

எழுதும் எழுத்துக்கள் - உன்னை மட்டுமே
உன் பெயரை மட்டுமே குறிப்பதாய் உணர்த்துகின்றது.....

காதலென்று சொல்ல நியாயமில்லை - ஆனால்
என் காணாமல் போன சிரிப்புகளைக் கண்டெடுத்த உறவு நீ என்றால் -
அது நிஜமன்றி வேறில்லை...

சொல்லித் தெரிவதில்லை உணர்வு -
என் நிழலே நீதான்....

நீ வேறென்று எண்ணவில்லை -
என் நினைவே நீயானாய்.....

உன் நினைவால்.. நான் மீண்டும் பிறந்தவன் ஆனேன்...!!!!!